இதனை இராமனிடம் சென்று சொன்னான் சுக்கிரீவன். மேலும் சுக்ரீவன். ” அரக்கர்கள் சூழ்ச்சி நிறைந்தவர்கள். அவர்களில் யாரையும் நம்பக் கூடாது. வீடணனுக்கு அடைக்கலம் தந்தால் நமக்குத் தீங்கே நேரும்” என்றான்.
ஆனால் அனுமனோ” இராவணனின் அவையில் விபீஷணன் மட்டுமே நேர்மையாகப் பேசினான். நம்பிக்கைக்கு உரியவனாகவே எனக்குத் தோன்றுகிறான். அவனால் நமக்கு நன்மை பல உண்டாகும்” என்றான். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட இராமன். ”யார் என்னிடம் அடைக்கலம் வேண்டினாலும் அடைக்கலம் தருவேன். அவர்களைக்
காப்பாற்றுவது என் கடமை. அதனால் என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை. விபீஷணனை இங்கு அழைத்து வாருங்கள் ” என்றான்.
இராமனின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்தான் சுக்கிரீவன். அவனே சென்று விபீஷணனை அழைத்து வந்தான் இராமனின் திருவடிகளை வணங்கினான் விபீஷணன். ” விபீஷணா! உன் நட்பை ஏற்றுக் கொண்டேன். நீயே இனி இலங்கையின் அரசன்.
இலங்கையின் மணிமுடியை உனக்குச் சூட்டுவேன் ” என்று வாக்குறுதி தந்தான் இராமன்.
கடலைச் கடந்து இலங்கையை எப்படி அடைவது என்று அவர்கள் ஆராய்ந்தார்கள். கடலில் அணை கட்டி அதன் வழியாகக் கடலைக் கடப்பது. அதற்குக் கடல் அரசனிடம் அனுமதி பெறுவது என்று முடிவு செய்தார்கள். கடல் அரசனுக்கு இராமன் பூஜைகள் செய்தான். ஆனால் கடல் அரசன் வரவில்லை. இதனால் கோபம் கொண்டான் இராமன். தன் வில்லில்
பிரம்மாஸ்திரத்தைப் பூட்டினான். கடலுக்குக் குறி வைத்தான். நடுங்கியபடி கடல் அரசன் கடலிலிருந்து வெளியே வந்தான். இராமனை வணங்கிய அவன் ”காலம் தாழ்த்தியதற்கு என்னை மன்னியுங்கள்.
என் மீது நீங்கள் பாலம் கட்டுங்கள். என்னால் அந்தப் பாலத்திற்கு எந்த இடையூறும் வராது. நானே அந்தப் பாலத்தைத் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். பாலம் கட்டும் முயற்சியில் குரங்குகள் இறங்கின.அவை மகேந்திர மலையிலிருந்து பெரிய பெரிய பாறைகளை எடுத்தன. பெரிய மரங்களை வேரோடு பிடுங்கின. அவற்றைக் கண்டு பாலத்தைக் கட்டி முடித்தன.எல்லோரும் பாலத்தின் வழியாகக் கடலைக் கடந்தார்கள். எளிதாக இலங்கையை அடைந்தார்கள். அங்கே கடற்கரையில் முகாமிட்டுத் தங்கினார்கள்.
தூதனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தான் இராமன். அங்கதனை அழைத்த அவன் ” தூதனாக நீ இலங்கைக்குச் செல். நான் சொல்லும் செய்தியைச் சொல்லிவிட்டு வா” என்றான்.வானத்தில் பறந்த அங்கதன் இலங்கை அரசவையை அடைந்தான். அரியணையில் அமர்ந்திருந்த இராவணன் ” நீ யார்?” என்று கேட்டான்.
” இராவணா! நான் வாலியின் மகன் அங்கதன். என்னை உனக்கு நினைவு இருக்கும். நான் சிறுவனாக இருந்தேன். என் தந்தை வாலி உன்னை இழுத்து வந்தார். சிறிது காலம் நீ என் விளையாட்டுப் பொருளாக இருந்தாய். இப்பொழுது நான் இராமரின் தூதனாக வந்துள்ளேன். நீயும் அரக்கர்களும் உயிர் பிழைக்கவேண்டுமா? இராமரிடம் சீதையை ஒப்படைத்து
மன்னிப்பு வேண்டு. போர் புரிய விரும்பினால் அதையும் தெரிவி. வாழ்வா சாவா என்பதை நீயே முடிவு செய்து கொள்” என்று முழக்கம் செய்தான்.
இதைக் கேட்ட இராவணனின் கண்கள் கோபத்தால் சிவந்தன. மீசை துடித்தது. ” குரங்கே! என் எதிரில் இப்படி பேச உனக்கு என்ன ஆணவம்? அரக்கர்களே! இதைப் பிடித்துக் கொல்லுங்கள்” என்றான் இராவணன். உடனே இரண்டு அரக்கர்கள் அங்கதனைப் பிடித்தார்கள். அவர்களைத் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான் அவன். உயரத்தில் இருந்தபடி அவர்களை நிலத்தில் வீசிக் கொன்றான்.
இராமனிடம் திரும்பிய அங்கதன் அரசவையில் நடந்ததைச் சொன்னான். குரங்கு தப்பிச் சென்று விட்டதே என்று துடித்தான் இராவணன். சீதையை எப்படியாவது தன் ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும். அப்படி நடந்தால் இராமன் உள்ளம் உடைந்து போவான். போர் செய்வதைவிட்டு விடுவான் என்று நினைத்தான்.
மந்திரவாதி ஒருவனை அழைத்தான். ‘ நீ மாயத்தால் இராமனின் தலையை உண்டாக்கு. அந்தத் தலையைக் கையில் பிடித்தபடி இரு. நான் அழைத்ததும் அசோக வனத்திற்கு வா“ என்றான். சீதையிடம் சென்ற அவன் ‘இராமனைக் கொன்றுவிட்டேன். அவன் தலையை வெட்டி வந்துள்ளேன். இறந்து போன அவனா? இனி உன்னைக் காப்பாற்றப் போகிறான்? என் ஆசைக்கு இணங்குவதைத் தவிர வேறுவழி இல்லை” என்று இடி குரலில் முழங்கினான். ” யார் இங்கே? இராமனின் தலையைக் கொண்டு வா“ என்று குரல் கொடுத்தான் இராவணன். கையில் இராமனின் தலையுடன் மந்திரவாதி வந்தான். அந்தத் தலையிருந்து குருதி ஒழுகிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த சீதை உண்மையான இராமன் என்றே நினைத்தாள். கதறி அழுத அவள்
அப்பொழுது வீரர்கள் சிலர் அங்கு வந்தார்கள். இராவணனை வணங்கிய அவர்கள் ‘ அரசே! அமைச்சர்களும் படைத் தலைவர்களும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றார்கள்.
உடனே இராவணன் அங்கிருந்து புறப்பட்டான். மாயத்தால் செய்யப்பட்ட இராமனின் தலையும் மறைந்தது. காவலுக்கு இருந்த அரக்கியர்கள் சீதையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். சீதையை எப்படியாவது தன் ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும். அப்படி நடந்தால் இராமன் உள்ளம் உடைந்து போவான். போர் செய்வதை விட்டு விடுவான் என்று நினைத்தான்.
மந்திரவாதி ஒருவனை அழைத்தான். ” நீ மாயத்தால் இராமனின் தலையை உண்டாக்கு. அந்தத் தலையைக் கையில் பிடித்தபடி இரு. நான் அழைத்ததும் அசோக வனத்திற்கு வா“ என்றான்.
சீதையிடம் சென்ற அவன் ”இராமனைக் கொன்றுவிட்டேன். அவன் தலையை வெட்டி வந்துள்ளேன். இறந்து போன அவனா? இனி உன்னைக்
காப்பாற்றப் போகிறான்? என் ஆசைக்கு இணங்குவதைத் தவிர வேறுவழி இல்லை” என்று இடி குரலில் முழங்கினான்.
” யார் இங்கே? இராமனின் தலையைக் கொண்டு வா“ என்று குரல் கொடுத்தான் இராவணன். கையில் இராமனின் தலையுடன் மந்திரவாதி வந்தான். அந்தத் தலையிருந்து குருதி ஒழுகிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த சீதை உண்மையான இராமன் என்றே நினைத்தாள். கதறி அழுத அவள் அப்படியே மயங்கி விழுந்தாள். அப்பொழுது வீரர்கள் சிலர் அங்கு வந்தார்கள். இராவணனை வணங்கிய அவர்கள் ” அரசே! அமைச்சர்களும் படைத் தலைவர்களும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றார்கள்.
உடனே இராவணன் அங்கிருந்து புறப்பட்டான். மாயத்தால் செய்யப்பட்ட இராமனின் தலையும் மறைந்தது. காவலுக்கு இருந்த அரக்கியர்கள் சீதையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள்.
அங்கே இருந்த திரிசிடை ” அம்மா! அரக்கர்களின் மாயை இது. உங்கள் கணவர் உயிரோடுதான் இருக்கிறார். பெரிய படையுடன் அவர் இலங்கை வந்து உள்ளார். போர் முரசுகள் ஒலிப்பது உங்களுக்குக் கேட்கவில்லையா?” என்று ஆறுதல் சொன்னாள். உண்மையை அறிந்த சீதையின் கலக்கம் நீங்கியது.
இன்று போய் நாளை வா
போர் தொடங்க முடிவு செய்தான் இராமன். ”வீரர்களே! உங்கள் வலிமையையும் வீரத்தையும் காட்ட நல்ல வாய்ப்பு கிடைத்தது. இலங்கை மாநகரைத் தாக்குங்கள்” என்று கட்டளை இட்டான். இதைக் கேட்ட குரங்குப் படையினர். ஆராவாரம் செய்தார்கள். பெரிய மரங்களையும் பாறைகளையும் தூக்கினார்கள். அவற்றால் கோட்டை மதிலையும் வாயில் கதவுகளையும் அடித்து நொறுக்கினார்கள்.அங்கே காவல். இருந்த அரக்கர்களுக்கும் குரங்குகளுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. எங்கும் போர் ஆராவாரமும் அலறலும் கேட்டபடி இருந்தன.
இந்திரனையே வென்ற இந்திரஜித் தேரில் அமர்ந்து போர்களத்திற்கு வந்தான். அவனைக் கண்ட அரக்கர்கள் ஆராவாரம் செய்தார்கள். இதைப் பார்த்த அங்கதன் கோபம் கொண்டான். இந்திரஜித்தின் தேரின் மீது பாய்ந்தான். தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்று வீழ்த்தினான். இந்திரஜித்தையும் தாக்கத் தொடங்கினான். மாயத்தில் வல்லவனான இந்திரஜித் அப்படியே வானத்தில் மறைந்தான். அங்கே இருந்தபடியே கூர்மையான அம்புகளை மழை போல
எய்தான். அவன் அம்புகளால் எண்ணற்ற குரங்குகள் இறந்தன. நிலை குலைந்த குரங்குப் படை ஓட்டம் பிடித்தது. நாகாஸ்திரத்தை எடுத்தான் அவன். இராமன் மீதும் இலக்குவன் மீதும் குறி வைத்து எய்தான். அந்த அம்பிலிருந்து இராமனையும் இலக்குவனையும் குரங்குகளையும் கட்டின. அவர்கள் மயங்கி விழுந்தார்கள். இதைக் கண்ட இந்திரஜித் மகிழ்ச்சி அடைந்தான். இலங்கை திரும்பிய அவன் தந்தை இராவணனிடம் நடந்ததைச் சொன்னான்.
” மகனே! செயற்கு அரிய செயல் செய்து விட்டாய். உன் வீரத்திற்கு என் பாராட்டுக்கள். நீ இந்திரனை வென்றதை விட மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவனைக் கட்டித் தழுவினான் இராவணன். போர்க்களத்தில் இராமனும் இலக்குவனும் குரங்குகளும் மயங்கிக் கிடந்தனர். திடீரென்று அங்கே பேரோசை எழுந்தது. நிலமும் கடலும் அதிர்ந்தன. வானமே இருண்டது போல இருந்தது. பெரிய இறக்கைகளை உடைய கருடன் அங்கே பறந்து வந்தது. இராம இலக்குவனர்களைக் கட்டியிருந்த பாம்புகள் கருடனைப் பார்த்தன. நடுக்கத்துடன் அங்கிருந்து பறந்து எங்கோ மறைந்தன.
கருடன் தன் இறக்கைகளை மெல்ல அசைத்தது. இனிய குளிர்ந்த காற்று எல்லார் மீதும் வீசியது. மயக்கம் தெளிந்து எழுந்தார்கள். புத்துணர்ச்சி பெற்ற குரங்குகள் விண்ணதிர ஆராவாரம் செய்தன. அந்த ஆராவாரத்தை இராவணனும் இந்திரஜித்தும் கேட்டார்கள்.
இராம இலக்குவனர்கள் உயிர் பெற்று விட்டார்களே. நம் முயற்சி வீணாகிவிட்டதே என்று திகைத்தான் இந்திரஜித். கோபத்தால் துடித்த இராவணன் படைத்தலைவர்கள் ஐவரை அழைத்தான். ” உங்கள் வலிமையைக் காட்டுங்கள். எதிரிகளை அழித்துவிட்டு வாருங்கள் ” என்றான். போர்க்களம் சென்ற அவர்கள் ஐவருமே குரங்குகளால் கொல்லப்பட்டனர். இதை அறிந்த இராவணன். ”நானே அவர்களைக் கொல்வேன்” என்று தேரில் ஏறினான்.
போர்க்களத்தில் இராவணனைப் பார்த்த அனுமன் கடுங்கோபம் கொண்டான். தேரில் பாய்ந்த அவன் இராவணனின் மார்பில் ஓங்கிக் குதித்தான். அதைத் தாங்கிக் கொண்டான் இராவணன். அனுமனின் மார்பில் பதிலுக்குக் குத்தினான். மயக்கம் அடைந்து விழுந்தான் அனுமன்.
அடுத்ததாக இலக்குவனோடு போர் செய்யத் தொடங்கினான் அவன் . இருவருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது.
சக்தி ஆயுதத்தை இலக்குவன் மீது வீசினான். இலக்குவன் மயங்கி விழுந்தான். அப்பொழுது இராமன் அங்கு வந்தான். அவனும் இராவணனும் நேருக்கு நேர் போர் செய்தார்கள். இராமனின் அம்புகளைத் தடுக்க வழி தெரியாமல் திணறினான் இராவணன், அப்பொழுது இராமன் அங்கு வந்தான். அவனும் இராவணனும் நேருக்கு நேர் போர் செய்தார்கள். இராமனின் அம்புகளைத் தடுக்க வழி தெரியாமல் திணறினான். இராவணன். தரையில் நின்று போர் செய்தான் இராவணன். அவனிடம் இருந்த படைக் கருவிகள் அனைத்தையும் அழித்தான் இராமன்.
போர் கருவிகள் ஏதும் இன்றிப் பரிதாபமாக நின்றான் இராவணன். அவனைப் பார்த்து இராமன். ”இன்று போய் நாளை போருக்குவா“என்றான்.
மாவீரனான தனக்கு இப்படி அவமானம் நேர்ந்ததே என்று வருந்தினான் இராவணன். தலை கவிழ்ந்தபடியே அரண்மனை திரும்பினான். என்ன செய்வது என்று சிந்தித்தான். வலிமையும் பேராற்றலும் நிறைந்த கும்பகருணனின் நினைவு அவனுக்கு வந்தது.
கும்பகர்ணன் போர்
வீரர்களை அழைத்த இராவணன். ” உறங்கும் கும்பகர்ணனை எழுப்பி அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.
வீரர்கள் முயற்சி செய்து கும்பகர்ணனை எழுப்பினார்கள். விழித்த அவன் அரண்மனை வந்து இராவணனை வணங்கினான். போர் ஏற்பட்டதையும் பிறகு நடந்ததையும் வருத்தத்துடன் சொன்னான் இராவணன். அண்ணா! நான் இருக்கும் போது நீங்கள் கலங்கலாமா? இப்பொழுதே போர்களம் செல்கிறேன். எதிரிகளை அழித்துவிட்டு வெற்றியுடன்
திரும்புகிறேன்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னான் கும்பகர்ணன்.
அவனை வாழ்த்தி அனுப்பினான் இராவணன். பெரிய மலை வருவதைப் போலப் போர்களத்திற்கு வந்தான் அவன். இடி போன்று முழக்கம் செய்தான். அவன் தோற்றத்தையும் முழக்கத்தையும் பார்த்துக் குரங்குகள் அஞ்சி நடுங்கின. ஊக்கம் பெற்ற அரக்கர்களோ ஆராவாரம் செய்தனர். கும்பகர்ணன் மீது குரங்குகள் பெரிய பெரிய பாறைகளை எறிந்தன. ஆனால் பாறைகள் அவன் உடலில் பட்டதும் தூள் தூளாயின. கையில் சிக்கிய குரங்குகளை நசுக்கிக் கொன்றான் அவன். இதைப் பார்த்த குரங்குகள் அஞ்சி ஓடத் தொடங்கின. கோபத்துடன் அங்கு வந்த அனுமன்கும்பகர்ணனோடு போரிடத் தொடங்கினான். அவன் மார்பில் ஓங்கி ஓரு குத்து விட்டான்.
அதைப் பொருட்படுத்தாத கும்பகர்ணன் சூலாயுதத்தால் அனுமனை ஓங்கி அடித்தான். துடிதுடித்த அனுமன் அப்படியே மயக்கம் அடைந்து வீழ்ந்தான்.
கண்ணில் பட்ட குரங்குகளை எல்லாம் கொன்று வீழ்த்தினான் கும்பகர்ணன். குரங்குப் படைகளுக்குப் பேரழிவு ஏற்படுவதைக் கண்டான் இராமன். கும்பகர்ணனை நோக்கிச் சென்றான்.கும்பகர்ணனும் இராமனை நோக்கி ஆராவாரத்துடன் வந்தான். குறுக்கே வந்த இலக்குவனை அவன் பொருட்படுத்தவில்லை. இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் கடுமையான. போர் நிகழ்ந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அம்பு மழை பொழிந்தனர்.
தன் அம்புகளால் கும்பகர்ணனின் அம்புகள் அனைத்தையும் வீழ்த்தினான் இராமன். கூரிய அம்புகளால் அவன் கைகளைத் துண்டித்தான். கால்களையும் துண்டித்தான்.
கால்களும் கைகளும் இல்லாத நிலையிலும் கும்பகர்ணனின் வலிமை குறையவில்லை. தன் வாயாலேயே குரங்குகளைப் பிடித்து உண்டான். வலிமை மிகுந்த இவனை உயிருடன் விடுவது கூடாது. தன் படைகளை அழித்துவிடுவான் என்று நினைத்தான் இராமன். ஓர் அம்பால் அவன் தலையைத் துண்டித்தான். அந்தத் தலை வேகமாகப் பறந்து சென்றது. இலங்கை மதிலில் மோதி சுவரை இடித்து தள்ளியது.
கும்பகர்ணன் மாண்டான் என்பதைக் கேள்விப்பட்டான் இராவணன். ” அன்புத் தம்பியே! எனக்கு உயிர் போன்றவனே. என்னை விட்டுப் போய் விட்டாயா? நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்” என்று அழுது புலம்பினான். அங்கு வந்த இந்திரஜித் தந்தையின் துன்பத்தைப் பார்த்தான்.
” தந்தையே! நான் இருக்கும் போது நீங்கள் கலங்கலாமா? இப்பொழுதே போர்க்களம் செல்கிறேன். இராமனையும் இலக்குவனையும் கொன்றுவிட்டு வருகிறேன். என் வீரத்தைப் பாருங்கள் ” என்று தேரில் ஏறினான்.
போர்க்களத்தில் அவனுக்கும் குரங்கு படைகளுக்கும் நீண்ட போர் நடந்தது. அவனால் அவர்களைச் சமாளிக்க இயலவில்லை. மாயத்தால் தான் இவர்களை வெல்லவேண்டும் என்று நினைத்தான். யாரும் தன்னைக் காணாதபடி வானத்தில் பறந்தான்.
எங்கே மறைந்தாலும் விட மாட்டோம் என்று குரங்குகள் கத்தின. வானத்தை நோக்கி எல்லாத் திசைகளிலும் அம்புகளை எய்தன. எந்த அம்பும் அவனைத் தாக்கவில்லை.
அவர்கள் மீது இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை எய்தான். அந்த அம்பால் போர்க்களத்தில் இருந்த அனைவரும் தாக்கப்பட்டனர். இராம இலக்குவனர்கள் உட்பட எல்லோரும் மயக்கம் அடைந்து வீழ்ந்தனர். அரக்கனாகிய விபிஷணனை அந்த அம்பு ஒன்றும் செய்யவில்லை. வெளியே சென்றிருந்த ஜாம்பவானும் அனுமனும் போர்க்களம் வந்தார்கள்.
இராம இலக்குவனர்களும் குரங்குகளும் இறந்து கிடப்பதாக நினைத்தார்கள். ”இனி நாங்கள் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? நாங்களும்உயிரைப் போக்கிக் கொள்கிறோம்” என்று அழுது புலம்பினார்கள். அவர்களைப் பார்த்து விபீஷ்ணன். ” இவர்கள் யாரும் இறக்கவில்லை. பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு மயக்கமாகிக் கிடக்கிறார்கள்.
ஏழு கடல்களுக்கு அப்பால் சஞ்சீவி மலை உள்ளது. அங்கே மின்னலைப் போல ஒளி வீசும் மூலிகைச் செடிகள் உள்ளன. அந்த மூலிகையின் மணம் பட்டால் போதும். இவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். தாமதம் செய்யக்கூடாது. விரைவில் அந்த மூலிகைச் செடிகளைக் கொண்டுவர வேண்டும்“ என்றான்.இப்பொழுதே கொண்டு வருகிறேன்” என்றான் அனுமன். வேகமாக வானத்தில் பறந்த அவன் சஞ்சீவி மலையை அடைந்தான்.
அங்கிருந்த செடிகளை எல்லாம் பார்த்தான். மின்னலைப் போல நிறைய செடிகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. மூலிகைச் செடியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினான்.
என்ன செய்வது? எது மூலிகைச் செடி என்பது தெரியவில்லையே. எப்படி எல்லோரையும் காப்பாற்றுவது? என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.தன் வலிமையைப் பயன்படுத்தி சஞ்சீவி மலையையே வேரோடு பிடுங்கினான். அதைத் தூக்கிக் கொண்டு வானத்தில் வேகமாகப் பறந்தான். அந்த மலையுடன் போர்களத்தில் இறங்கினான். மூலிகையின் மணம் எங்கும் பரவியது. இராமனும் இலக்குவனும் குரங்குகளும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
இராவணனின் முடிவு
ஆராவாரம் செய்த குரங்குகள் மீண்டும் போர் செய்யத் தொடங்கின. எல்லோரும் உயிர் பெற்றார்கள் என்பதை அறிந்த இந்திரஜித் திகைத்தான். வழக்கம் போல் மாயத்தால் அவர்களைக் குழப்ப நினைத்தான்.
சீதை போன்று மாய வடிவம் செய்தான் அவன். அதன் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்தான். உயிருள்ள சீதை போன்றே அது அழுது புலம்பியது.உன்னால் தானே இவ்வளவு கெடுதி நேர்ந்தது? நீ உயிருடன் இருக்கக் கூடாது. ஒழிந்து போ” என்று அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். சீதை துடிதுடித்து இறந்து வீழ்ந்தாள்.
இந்தக் கொடுமையைக் கண்ட குரங்குகள் அலறின. அழுது புலம்பியபடியே இராமனிடம் இதைத் தெரிவித்தன. இந்திரஜித்தால் சீதை கொல்லப்பட்டாள் என்பதை அறிந்தான் இராமன்.
”சீதை! சீதை! நீ இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என்று அழுது புலம்பினான். நெருப்பில் விழுந்த புழுப் போலத் துடித்தான்.
அங்கு நிகழ்ந்ததைப் பார்த்த இந்திரஜித் மகிழ்ந்தான். போரில் வெற்றி பெற வேள்வி செய்ய வேண்டும் என்று நினைத்தான் இலங்கை சென்ற அவன் வேள்வி செய்யத் தொடங்கினான். அழுது புலம்பிக் கொண்டிருந்த இராமனிடம் விபீஷணன் வந்தான்.” அரக்கர்கள் மாயத்தில் வல்லவர்கள். மாயத்தால் செய்யப்பட்ட சீதையையே இந்திரஜித் கொல்வதாக நடித்தான். அதை உண்மை என்று நம்பி விட்டீர்கள்.
வெற்றி வேண்டி நிகும்பலை என்ற இடத்தில் வேள்வி செய்கிறான். வேள்வி நிறைவு பெற்றால் அவனை யாராலும் வெல்ல முடியாது” என்றான். உள்ளம் தேறிய இராமன் ” இலக்குவனா! நீ சென்று இந்திரஜித்தின் வேள்வியை அழி” என்றான்.
இலக்குவன் புறப்பட்டான். அவனுக்குத் துணையாக அனுமனும் விபீஷணனும் சென்றார்கள். வேள்வி நிகழும் இடத்தை அவர்கள் அடைந்தார்கள். வேள்வித் தீயில் இந்திரஜித் நெய்யை ஊற்றிக் கொண்டிருந்தான். அவனைக் கோபத்துடன் பார்த்தான் இலக்குவன்.”இங்கே வந்து ஒளிந்து வேள்வியா செய்கிறாய்? இந்திரனை வென்ற நீயா கோழையாகி விட்டாய்? வீரனானால் என்னுடன் போருக்கு வா“ என்று அழைத்தான்.
கோபம் கொண்ட இந்திரஜித் போர் செய்யத் தொடங்கினான். மாயத்தினால் பல வடிவங்களாக நின்றான். இலக்குவன் மீது அம்புகளை விட்டான். இருவருக்கும் மூன்று நாட்கள் கடுமையாகப் போர் நிகழ்ந்தது.மாயங்களை அழிக்கும் இந்திர அஸ்திரத்தை எடுத்தான் இலக்குவன் .உடனே இந்திரஜித்தின் மாயங்கள் அனைத்தும் மறைந்தன. அந்த அம்பு இந்திரஜித்தின் தலையை வெட்டி வீழ்த்தியது.
இராமனிடம் திரும்பிய மூவரும் வெற்றிச் செய்தியைச் சொன்னார்கள். இந்திரஜித் இறந்தான் என்பதைக் கேள்விப்பட்டான் இராவணன்.
உள்ளம் உடைந்த அவன். ”இந்திரனையே வென்ற மாவீரனே! உன்னையும் இழந்துவிட்டேனே. இனி நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? இன்றைய போரில் இராமனைக் கொல்வேன். இல்லையேல் நான் சாவேன்” என்று அழுது புலம்பினான்.
உள்ளம் தேறிய அவன் எஞ்சியிருந்த படை வீரர்களைத் திரட்டினான். கடல் போன்ற படை சூழ்ந்து வரத் தேரில் புறப்பட்டான்.போர்க்களத்தில் குரங்குப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தினான். அவன் தாக்குதலைத் தாங்காமல் சுக்கிரீவன் மயங்கி விழுந்தான். இதைப் பார்த்த இராமன் இராவணனை நோக்கி வந்தான். இருவர்க்கும் கடும்போர் நிகழ்ந்தது. இராமனது வில்லின் வேகம் கண்டு எல்லோரும் திகைத்தார்கள்.
இராமனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இராவணன் திணறினான். இராவணனின் பத்துத் தலைகளையும் அம்புகளால் வீழ்த்தினான் இராமன். என்ன வியப்பு! மீண்டும் மீண்டும் அந்தத் தலைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. இராவணனைக் கொல்ல என்ன வழி என்று சிந்தித்தான்.
பிரம்மாஸ்திரத்தை எடுத்தான் அவன்.இராவணனின் மார்புக்குக் குறி வைத்து எய்தான். அந்த அம்பு இராவணனின் மார்பைத் துளைத்துச் சென்றது. இறந்து விழுந்தான் அவன். இதைக் கண்ட குரங்குகள் வெற்றி ஆராவாரம் செய்தன. எஞ்சி இருந்த அரக்கர்கள் அஞ்சி ஓடினார்கள்.
படைகளுடன் வெற்றி வீரனாக இராமன் இலங்கைக்குள் நுழைந்தான். வாக்குறுதிப்படி வீடணனுக்கு மணிமுடி சூட்டினான் இராமன். இலங்கை அரசனான விபீணன் இராமனைப் பணிந்து வணங்கினான். அசோக வனத்தில் இருந்த சீதைக்கு வெற்றிச் செய்தி தெரிந்தது. கொடுமைபடுத்திய அரக்கியர்கள் அவளைப் பணிந்தனர். தங்களை மன்னிக்குமாறு வேண்டினார்கள்.
சீதைக்கு அழகிய அணிகலன்களை அவர்கள் அணிவித்தனர். பல்லக்கில் அமர வைத்து இராமனிடம் அழைத்து வந்தனர்.தன் கணவனைக் கண்ட அவள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அவனுடைய திருவடிகளை வணங்கினாள்.
எங்கும் இன்பமே
சீதையைப் பார்த்து இராமன். ”நீ மாற்றானின் சிறையில் ஓராண்டு இருந்து உள்ளாய். என் பெருமைக்கு இழுக்கு என்பதால் உன்னை மீட்டேன். உன்னை எங்கு விருப்பமோ அங்கு செல். எந்தத் தடையும் இல்லை” என்றான்.
கொடுமையான சொற்களைக் கேட்ட சீதை துடிதுடித்தாள். அருகிலிருந்த இலக்குவனைப் பார்த்தாள். ” தீ வளருங்கள். அதில் குதித்து உயிரை விடுகிறேன் என் துன்பம் தீர அதுவே வழி” என்றாள்.இராமனின் குறிப்பை உணர்ந்த இலக்குவன் தீ வளர்த்தான். இராமனை வலம் வந்த சீதை தீயின் அருகே சென்றாள்.
”தீக் கடவுளே? கனவிலும் நான் கணவரை மறவாதவள் .இது உண்மையானால் என்னைக் காப்பாற்றும்“ என்று தீக்குள் குதித்தாள். தீக் கடவுள் அவளைத் தாங்கியபடி வெளியே வந்தார்.அம்மா நீயே கற்புக்கு அரசி. உன்னை எரிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை” என்று வாழ்த்தி மறைந்தார். கற்புக்கு இவ்வளவு ஆற்றலா என்று எல்லோரும் வியந்து நின்றார்கள்.
சீதையை அன்புடன் பார்த்த இராமன். ” என் உயிர் போன்றவள் நீ. உன் மீது ஐயப்படுவேனா? உன் கற்பின் பெருமையை உலகம் அறிய
வேண்டும். அதற்காகவே இந்தக் கொடுமையைச் செய்தேன்” என்றான். அங்கே மகிழ்ச்சி வெள்ளம் நிலவியது.
” விபீஷணா! நான் காட்டிற்கு வந்து பதினான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. அயோத்திக்கு விரைந்து செல்ல வேண்டும்” என்றான் இராமன்.
” வானில் செல்லும் விமானம் உள்ளது. அதில் அமர்ந்து நீங்கள் அயோத்தி செல்லலாம்” என்றான் விபீஷணன்.
அனுமனை அழைத்த இராமன் ” விரைந்து அயோத்தி செல். என் வருகையை பரதனிடம் சொல்” என்றான். வேகமாகப் பறந்த அனுமன் வழியில் குகனைச் சந்தித்தான். மகிழிச்சியான செய்தியை அவனிடம் தெரிவித்தான். பிறகு சிறிதும் தாமதிக்காமல் அயோத்தியை அடைந்தான். அங்கே பரதன் பதினான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. இராமர் வரவில்லை. இனியும் உயிர் வாழ்வதில் பயன் இல்லை என்று நினைத்தான்.தீயை வளர்த்தான் அவன். யார் தடுத்தும் கேட்கவில்லை. ” இராமா! இராமா! என்று சொல்லிக் கொண்டே தீயை வலம் வந்தான்.
வானில் பறந்து வந்த அனுமன் இதைப் பர்ர்த்தான். ” இராமர் வந்து கொண்டிருக்கிறார்” என்று குரல் கொடுத்தான். பாய்ந்து பரதனைத் தடுத்து நிறுத்தினான்.மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னீர். நீர் யார்?” என்று கேட்டான் பரதன். ” என் பெயர் அனுமன்” என்ற அவன் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். சிறிது நேரத்தில் விமானமும் அங்கு வந்தது. அதிலிருந்து இராமனும் சீதையும் இலக்குவனும் இறங்கினார்கள்.
” தம்பி!” என்று பரதனைக் கட்டித் தழுவிக் கொண்டான் இராமன். இருவர் கண்களிலும் கண்ணீர் வெளிப்பட்டது. இராமன் முடி சூட நல்ல நாள் குறிக்கப்பட்டது.
இராமனுடைய பட்டாபிஷேகத்திற்குத் தேவைப்பட்ட பொருள்கள் அதிவிரைவில் சேகரிக்கப்பட்டன. புண்ணிய ஸ்தலங்களிலிருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டன.
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்கள். எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது. வீதிகள் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன.
வசிஷ்ட முனிவர் இராமனுக்கு மணிமுடி சூட்டினார். அரசனான இராமன் வந்தவர்களுக்கு வாரி வாரி வழங்கினான்.
தர்மத்தின் சொரூபமாக இராமன் இருந்தான். தந்தையின் பாங்கில் நாட்டைச் செம்மையாக ஆண்டு வந்தான். மக்கள் யாவரும் கடவுள் பக்தி படைத்தவர்களாக இருந்தனர்.
நிறைந்த செல்வமும் சாந்தமும் எங்கும் நிலவின. மக்கள் எல்லோரும் இன்புற்றும் திருப்தியடைந்தும் இருந்தனர். திருட்டு. கொலை. கொள்ளை போன்றவை ராமராஜ்யத்தில் நிகழ்ந்தது கிடையாது. மழையும் வெயிலும் முறையாக அமைந்திருந்தன. எல்லா வளங்களும் பெற்று மக்கள் சிறப்புடன் ராமன் ஆட்சியில் வாழ்ந்தனர்.
இராமாயண கதாபாத்திரங்கள்
அகம்பனன் : இராவணனின் போர் வீரர்களில் ஒருவன்
அகஸ்தியர் : தண்டக வன மாமுனிவர். இராமனுக்கு அரிய அஸ்திரம் கொடுத்தவர். ராம உபாசனையைத் தொடக்கி வைத்தவர்.
அகல்யை : கெளதம மஹரிஷியின் பத்தினி. =ராமனால் அவள் சாப விமோசம் பெற்றாள்.
அங்கதன் : வாலியின் மகன்.
ஆஞ்சனேயன் : சிறந்த ராம பக்தன். அனுமன். மாருதி. ராமதூதன் என்பன ஆஞ்சனேயருடைய வேறு பெயர்கள்.
இந்திரஜித் : இராவணனின் மூத்த மகன். மாய வித்தைகள் செய்வதில் வல்லவன்.
கபந்தன் : தலையற்ற சிலந்தி போன்ற அமைப்பு உடைய அரக்கன். இவனை இராமன் கொன்று சாபவிமோசனம் கொடுத்தான்.
கரன் : இராவணனுடைய ஜனஸ்தானத்தின் பிரதான தளபதி.
குகன் : கங்கைக் கரை வேடர்களின் தலைவன். = ராமனின் நண்பன்.
கும்பகர்ணன் : இராவணனின் முதல் தம்பி . தூக்கத்தில் சிறந்தவன்.
கும்பன் : கும்பகர்ணனின் மகன்.
கைகேயி : தசரதனின் முதல் மனைவி. பரதனின் தாய்.
கெளதமர் : சிறந்த முனிவர். அகல்யையின் கணவன்.
சத்ருக்கனன் : தசரதனின் மகன். சுமத்திரையின் இரண்டாவது மகன்.
சம்பாதி : கழுகு. ஜடாயுவின் அண்ணன்.
சீதை : இராமாயணத்தின் கதாநாயகி. ராமனது மனைவி.
சுக்ரீவன் : வாலியின் தம்பி. ராமனுக்கு உதவியவன்.
சுபாகு: கொடிய அரக்கன். மாரீசனின் சகோதரன்.
சுமந்திரன் : தசரதச் சக்கரவர்த்தியின் தேரோட்டி.
சுமத்திரா : தசரதனின் இரண்டாவது மனைவி. இலக்குவன். சத்ருக்கனன் இவர்களின் தாய்.
சூர்ப்பணகை : இராவணனின் சகோதரி. இராவண சம்ஹாரத்திற்கு வித்திட்டவள்.
தசரதன் : அயோத்தியின் மன்னன். ராமனின் தந்தை.
தாடகை : கொடிய அரக்கி. விஸ்வாமித்திரரின் கட்டளைப்படி இராமனால் கொல்லப்பட்டவள்.
தாரை : வாலியின் மனைவி. இவள் சிறந்த அறிவாளி
திரிசிடை : சீதைக்கு நியமிக்கப்பட்ட காவல் அரக்கிகளுள் ஒருத்தி. நல்ல இயல்பு வாய்ந்தவள்.
பரசுராமன் : விஷ்ணுவின் அவதாரம்
பரத்வாஜர்: உயர்ந்த மனிதர். ராமன் இவரை வனவாச ஆரம்பத்திலும் இறுதியிலும் இவரைச் சந்தித்தான்.
பரதன் : தசரதனின் மகன். கைகேயின் புத்திரன்.
மண்டோதரி : இராவணனின் மனைவி. இந்திரஜித்தின் தாய்.
மந்தரை : கைகேயியின் தாதிமார்களில் ஒருத்தி. கூன் முதுகு உள்ளமையால் இவள் கூனி என்ற பெயர் பெற்றாள்.
மாரீசன் : சீதையைத் திருடுவதற்கு இராவணனுக்கு உதவிய வஞ்சக அரக்கன்.
இராமன்: இராமாயணத்தின் கதாநாயகன். தசரதன் மகன்.
ரிஷ்ய சிருங்கர் : தசரதருக்காகப் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தவர்.
லட்சுமணன். : தசரதன் மகன். சுமத்திரையின் புதல்வன்.
வஸிஷ்டர் : தசரதனின் குலகுரு.
வாலி : கிஷ்கிந்தையின் வானர அரசன். மிகச் சிறந்த வீரன்.
விஸ்வாமித்திரர்: சிறந்த முனிவர். இராமனுக்கு அஸ்திரப் பயிற்சி அளித்தவர்.
விபீஷணன்: இராவணனின் இரண்டாவது தம்பி.
விராதன்: தண்டக வனத்தில் இராமனால் வதம் செய்யப்பட்ட அரக்கன்.
ஜடாயு : இவன் ஒரு கழுகு சம்பாதியின் தம்பி . தசரதனின் நண்பன்.
ஜனகன் : மிதிலை தேசத்தின் அரசன். சீதையின் தந்தை.
ஜாம்பாவான் : வானரப் படையின் படைத் தலைவர்களில் ஒருவன் வயதான கரடி.